ஈரோட்டில் தொடர் சாலை மறியல் போராட்டம்: அரசு ஊழியர்கள் 85 பேர் கைது
ஈரோட்டில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 85 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கை, வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
85 பேர் கைது
அதன்படி கடந்த 2-ந்தேதி சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேரும், 3-ந்தேதி 42 பேரும், நேற்று முன்தினம் 83 பேரும் கைது செய்யப்பட்டு ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டாலும் வீடுகளுக்கு செல்லாமல் மாநகராட்சி மண்டபத்திலேயே விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. முன்னதாக மாநகராட்சி மண்டபத்தில் இருந்த அரசு ஊழியர்கள் அங்கிருந்து ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்துக்கு வந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து அவர்கள் கச்சேரி வீதி செல்லும் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 85 பேரை கைது செய்து மாநகராட்சி மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.