அரசு ஊழியர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டம்
மயிலாடுதுறையில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் 4-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 22 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 4-வது நாளாக நடந்த இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தின்போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் சிலர் சாலையில் படுத்துக்கொண்டு கைதாக மறுத்தனர். இதனையடுத்து சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி கொண்டு வேனில் ஏற்றினர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நடராஜன், அரசு மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கலா என அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த 22 பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் கச்சேரி சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.