வி.கைகாட்டியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

வி.கைகாட்டியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-06 01:58 GMT
வி.கைகாட்டி

அரியலூர் மாவட்டம் தேளூர், ரெட்டிப்பாளையம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வி.கைகாட்டியில் 250-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியை சுற்றியுள்ள காத்தான்குடிகாடு, காவனூர், கா.அம்பாபூர், விளாங்குடி, ஒரத்தூர்மு.புத்தூர், முனியங்குறிச்சி, பெரியதிருக்கோணம், விக்கிரமங்கலம், பெரியநாகலூர், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தினமும் வி.கைகாட்டி வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் வி.கைகாட்டி பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

இந்நிலையில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி கல்லகம்கேட் முதல் மீன்சுருட்டி வரை சுமார் ரூ.900 கோடி மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும் உணவகங்கள், வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் செல்வதற்கு ஜெயங்கொண்டம் சாலை ஓரத்தில் வாய்க்கால் இருந்தது. தற்போது மேம்பால பணிக்காக அப்பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டது.

இதனால் வாய்க்கால் தூர்ந்து கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் அருகே முருகன் கோவில் மற்றும் பஸ் நிறுத்தம் இருப்பதால் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்களும், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்