தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர்
நாகை மாவட்டத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த மாதம் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பெரும்பாலான இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மீண்டும் முளைக்க தொடங்கின. பருவம் தவறிய இந்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணமும், 100 சதவீத காப்பீட்டு இழப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மத்திய மீன்வளத்துறை மேம்பாட்டு ஆணையர் பவுல் பாண்டியன் தலைமையில், நெடுஞ்சாலை அமைச்சக மண்டல மேலாளர் மேலாளர் ரணஞ்சேசிங், மத்திய மின்சார ஆணைய உதவி ஆணையர் ஷீபம்கார்க் ஆகியோர் அடங்கிய மத்தியக்குழுவினர், பருவம் தவறி பெய்த மழையால் நாகை மாவட்டத்தில் சேதம் அடைந்த பயிர்களை நேற்று ஆய்வு செய்தனர். நேற்று காலை வேளாங்கண்ணி அருகே கருங்கண்ணி பகுதியில் மழையால் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட்டனர். பின்னர் வேளா ண்மை துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பயிர் பாதிப்பு மற்றும் பருவம் தவறி பெய்த மழையளவு குறித்த வைத்திருந்த போர்டை பார்வையிட்டனர். ்தொடர் ந்து பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது மத்தியக்குழுவினரிடம் விவசாயிகள் கூறியதாவது:-
மழை பெய்து வயல்கள் தண்ணீரில் மூழ்கி இருந்த போது முதல்- அமைச்சர் இப்பகுதியை பார்வையிட்டார். இதற்கான அறிக்கை மத்திய- மாநில அரசுகளுக்கு சமர்ப்பித்தும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
ஆய்வுகளின் போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கேட்டோம். ஆனால் எக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இயற்கை இடர்பாடு காலங்களில் மத்தியக்குழு, மாநிலக்குழு என குழுக்கள் வந்து பார்வையிடுகிறது. ஆனால் நிவாரணம் விவசாயிகளுக்கு கிடைப்பது இல்லை.
தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழை நீர் வடிகால் பகுதியாக நாகை உள்ளது. மேலும் கடல் நீர் உட்புகுவதால் நிலத்தின் தன்மை மாறி விளைச்சல் பாதிக்கப்படுகிறது. எனவே பயிர் பாதிப்புகளை பொது பாதிப்பாக கருதி இன்சூரன்ஸ் தொகையை அறிவிக்க வேண்டும். அதை விட்டு விளைச்சல் அடிப்படையில் இன்சூரன்ஸ் தொகை அறிவித்தால் விவசாயிகள் அதிக அளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதே நிலை நீடித்தால் விளை நிலம் இருக்கும் விவசாயிகள் இருக்க மாட்டார்கள். விளை நிலங்களில் கருவேல மரங்கள் மண்டி போய்விடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், வேளாண்மை இணை இயக்குனர் கல்யாணசுந்தரம், துணை இயக்குனர் பன்னீர்செல்வம் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளத்தில் கனமழையால் சேதமடைந்த நிலக்கடலை, நெல் உள்ளிட்ட பயிர்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர் ரணசஞ்சே சிங், மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குனர் ஷியாம் கார்க், மத்திய மீன் வள மேம்பாட்டுத் துறை ஆணையர் பால் பாண்டியன் ஆகியோர் அடங்கிய இந்த குழுவினர் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நிலக்கடலை மற்றும் நெற்பயிர்களை ஆய்வு செய்தனர். மத்திய குழுவிடம் விவசாயிகள் இந்த ஆண்டு வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரம் ஏக்கரில் கடலைசாகுபடி செய்யபட்டது. பருவம் தவறிய மழையால் கடலை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் எங்கள் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஏக்கருக்கு ரூ.25,000 நிவராணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.