கறம்பக்குடி தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்

கறம்பக்குடி தாலுகா அலுவலக ஆதார் மையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-02-06 01:25 GMT
ஆதார் மையம்
கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. ஒரு லட்சதிற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார். கறம்பக்குடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்டோர் ஆதார் கார்டுக்கு விண்ணபிக்க, திருத்தம் செய்ய வருகின்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் 2 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
 இதனால் ஆண்கள் 20 பேருக்கும், பெண்கள் 20 பேருக்கும் மட்டுமே டோக்கன் வழங்கபடுகிறது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே டோக்கன்பெறுவதற்காக பொதுமக்கள் காலையில் இருந்தே தாலுகா அலுவலகம் வந்து காத்திருக்கின்றனர்.

கூடுதல் பணியாளர்கள்
இது குறித்து ஆதார் கார்டில் திருத்தம் செய்யவந்த பெண் ஒருவர் கூறுகையில், கிராம பகுதிகளில் வயதானவர்களின் ஆதார் கார்டுகளில் பிறந்த தேதி விவரங்கள் முழுமையாக இல்லை. பெயர், முகவரி போன்றவற்றிலும் குளறுபடி உள்ளது. ஆகையால் திருத்தம் செய்யவே பலர் வருகின்றனர். தினமும் தாலுகா அலுவலகத்தை திறக்கும்போதே தள்ளுமுள்ளு, கூச்சல் குழப்பமாகவே உள்ளது. இதனால் தாலுகா அலுவலகத்தின் மற்ற பணிகள் பாதிக்கபடுகின்றன. ஆதார் கார்டு பெறுவதற்காக வேலை யை விட்டு அலைந்து திரியவேண்டி இருப்பதால் பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே கறம்பக்குடி தாலுகாவில் ஆதார் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், தாலுகா அலுவலகத்தில் உள்ள மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து அனைவருக்கும் ஆதார் விண்ணப்பங்களை வழங்கி விவரங்களை பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்