திருமழபாடியில் சுயம்பிரகாச சுவாமி குரு பூஜை
திருமழபாடியில் சுயம்பிரகாச சுவாமி குரு பூஜை நடைபெற்றது.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள சுயம்பிரகாச சுவாமி மடத்தில் 124 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்த சுயம்பிரகாச சித்தருக்கு குருபூஜை விழா நடைபெற்றது. விழாவில் சுயம்பிரகாச சுவாமியாக வீற்றிருக்கும் லிங்கத்திற்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருமழபாடி, கண்டராதித்தம், செம்பியக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இரவில் சுயம்பிரகாச சுவாமியின் திருவுருவ சிலைக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து, தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் ஆங்காங்கே பொதுமக்கள் தேங்காய், பழம் படைத்து வழிபாடு செய்தனர். மடத்தில் இருந்து தொடங்கிய தேர் ஊர்வலமாக ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் மடத்தை வந்தடைந்தது.