மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2021-02-06 00:17 GMT
திருப்புவனம், 

திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென்மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்தகோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற தினங்களில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினம், ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், மாதந்தோறும் பவுர்ணமி தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 
இந்த சிறப்பு பூஜையில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக அம்மனுக்கு தேங்காய் உடைக்காமலும், எலுமிச்சை மாலை சாத்தாமலும் பக்தர்கள் மிகுந்த கவலையில் சாமி தரிசனம் செய்து சென்றனர். கூட்டமும் அதிகம் வராமலும் இருந்தது

தற்போது அரசு உத்தரவிட்டதை அடுத்து வெள்ளிக்கிழமையான நேற்று  பக்தர்கள் குவிந்தனர். மேலும் தங்களது நேர்த்திக்கடனாக எலுமிச்சை மாலை, அம்மனுக்கு சேலை சாத்துதல், தேங்காய் உடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகுந்த சந்தோஷத் துடன் சாமி தரிசனம் செய்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செல்வி, அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன் மற்றும் அறங்காவலர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்