தஞ்சையில், வயதான தம்பதியினர் தற்கொலை முயற்சி: மனைவி சாவு; கணவர் உயிருக்கு போராட்டம்
தஞ்சையில், தற்கொலைக்கு முயன்ற தம்பதியினரில் மனைவி பரிதாபமாக இறந்தார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வயதான தம்பதி
தஞ்சை மானோஜியப்பா வீதி பக்கோசாமி வட்டாரம் பகுதியில் வசித்து வந்தவர் கோபிநாத் ராவ்(வயது 67). இவர், தஞ்சை கூட்டுறவு அச்சகத்தில் உதவியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி கஸ்தூரிபாய்(65). இவர்களுடைய மகன் கார்த்திக்(34). இவர், தஞ்சையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். கோபிநாத் ராவ் தனது மனைவியுடன் தனி வீட்டில் வசித்து வந்தார்.
கதவு திறக்கப்படவில்லை
நேற்று முன்தினம் இரவு கார்த்திக் தனது பெற்றோரை நேரில் சந்தித்து பேசிவிட்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை 9 மணி அளவில் கார்த்திக் தனது பெற்றோரை பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. கதவை பலமுறை தட்டி பார்த்தபோதும் கதவை யாரும் திறக்கவில்லை.
தூக்கில் பிணம்
இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தார். படுக்கை அறையில் உடலில் ரத்த காயத்துடன் கோபிநாத் ராவ் உயிருக்கு போராடி கொண்டிருந்ததையும், கஸ்தூரிபாய் தூக்கில் பிணமாக தொங்கியதையும் கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.
பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபிநாத் ராவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சகோதரியுடன் தகராறு
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-
கஸ்தூரிபாய்க்கும், அதே பகுதியில் வசிக்கும் அவரது சகோதரி விஜயா(67) என்பவருக்கும் இடையே வீடு தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த வீட்டை விற்று அதன்மூலம் கிடைத்த பணத்தை இருவரும் பிரித்து கொண்டனர். அதன்பிறகும் இவர்களுக்குள் பிரச்சினை நீடித்து வந்தது. கடந்த 2-ந் தேதி கஸ்தூரிபாய் வீட்டின் வழியாக விஜயா நடந்து சென்றார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதை அறிந்து வந்த கார்த்திக் இருவருக்கும் இடையே சமரசம் செய்து வைத்தார். இதன்காரணமாக இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் திடீரென கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சேலையில் கஸ்தூரிபாய் தூக்குப்போட்டு கொண்டார். கோபிநாத் ராவும் தூக்குப்போட்டபோது சேலை அவிழ்ந்ததால் கீழே விழுந்து விட்டார். அதன்பிறகு அவர் வீட்டில் இருந்த பிளேடை எடுத்து கழுத்து மற்றும் கைகளில் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர் காப்பாற்றப்பட்டாலும் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கண்ட தகவல்கள் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
காரணம் என்ன?
இது குறித்து கார்த்திக் அளித்த புகாரின்பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்து கஸ்தூரிபாய் இறந்தாரா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.