சென்னை கொருக்குப்பேட்டையில் பயங்கரம்: இளம்பெண்ணை தாயுடன் எரித்து கொன்றுவிட்டு காதலனும் தற்கொலை - காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்

காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் இளம்பெண்ணை அவரது தாயுடன் உயிருடன் எரித்துக்கொன்றுவிட்டு காதலனும் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சென்னை கொருக்குப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-02-05 23:12 GMT
பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டை ஆனந்தநாயகி நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்டம்மாள் (வயது 46). இவருடைய கணவர் வெங்கடேசலு. இவர், சென்னை மாநகராட்சியில் ஊழியராக வேலைசெய்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவர்களுக்கு ரஜிதா (26) என்ற ஒரே மகள் மட்டும் இருந்தார். தாய்-மகள் இருவர் மட்டும் தனியாக வசித்து வந்தனர். தந்தை இறந்ததால் ரஜிதாவுக்கு கருணை அடிப்படையில் மாநகராட்சியில் வேலை வழங்கப்பட்டது. தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்தில் அலுவலக உதவியாளராக அவர் வேலை செய்து வந்தார்.

ரஜிதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்ற சதீஷ் (30) என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்தனர். அடிக்கடி இருவரும் ஜாலியாக பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றித்திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

சதீஷ், சென்னை மாநகராட்சி ராயபுரம் 5-வது மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் இவர்களின் காதலை கண்டுகொள்ளாத வெங்கட்டம்மாள், ரஜிதாவுக்கு மாநகராட்சியில் வேலை கிடைத்ததும் இவர்களின் காதலை விரும்பவில்லை. சதீசுடனான காதலை கைவிடுமாறு மகளை கண்டித்தார்.

சதீஷ், நிரந்தர பணியாளர் அல்ல, ஒப்பந்த பணியாளர் எனவும் மகளிடம் கூறி வந்தார். அதன்பிறகு ரஜிதாவும் சதீசுடன் பேசுவதை குறைத்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சதீஷ், ரஜிதாவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வெங்கட்டம்மாளிடமும், தன்னை காதலித்து விட்டு வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என ரஜிதாவிடமும் தகராறு செய்து வந்தார்.

தனது மகளை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என வெங்கட்டம்மாளும், தாய் சொன்னபடியே கேட்பதாக கூறி ரஜிதாவும் சதீசை திருமணம் செய்ய மறுத்தார். இதனால் தன்னைவிட்டு ரஜிதா சென்றுவிடுவாரோ என்ற எண்ணத்தில் சதீஷ், வீடு புகுந்து ரஜிதாவின் கழுத்தில் கட்டாய தாலி கட்டியதாகவும், அதை வெங்கட்டம்மாள் கழற்றி எறிந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ரஜிதாவுக்கு, சென்னை நொச்சிகுப்பத்தை சேர்ந்த வேறொரு வாலிபரை வெங்கட்டம்மாள் மாப்பிள்ளையாக தேர்வு செய்தார். அவர், ரஜிதா பணியாற்றும் அதே தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் நிரந்தர ஊழியராக உள்ளார். இதனால் தாய் தேர்வு செய்த மாப்பிள்ளையை மணமுடிக்க ரஜிதா சம்மதம் தெரிவித்தார். கடந்த மாதம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இன்னும் திருமண தேதி நிச்சயிக்கப்படாமல் இருந்தது.

இதையறிந்த சதீஷ், வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமாகி விட்டதால் இனிமேல் ரஜிதா நமக்கு கிடைக்க மாட்டார். நமக்கு கிடைக்காத அவர் வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என எண்ணினார். எனவே தன்னை காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த காதலி, மகளை திருமணம் செய்து வைக்க மறுத்த அவரது தாய் இருவரையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள சதீஷ் முடிவு செய்தார்.

அதன்படி நேற்று அதிகாலையில் சதீஷ் பெட்ரோல் கேனுடன் தனது காதலி ரஜிதா வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தார். அங்கு தாய்-மகள் இருவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். சதீஷ், தனது கையில் தயாராக வைத்து இருந்த பெட்ரோலை தனது காதலி ரஜிதா, அவரது தாய் வெங்கட்டம்மாள் இருவர் மீதும் ஊற்றினார். மீதம் இருந்த பெட்ரோலை தனது உடலிலும் ஊற்றிக்கொண்டார்.

பின்னர் தாய், மகள் இருவரையும் உயிருடன் தீ வைத்து எரித்துவிட்டு, தனது உடலிலும் தீயை வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் 3 பேரும் வீட்டுக்குள் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டும், ரஜிதா வீட்டில் இருந்து கரும்புகை வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 3 பேரும் தீயில் உடல் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். ஆர்.கே.நகர் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதுபற்றி ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரத்தில் தனது காதலியை, அவரது தாயுடன் உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு காதலனும் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்