பெண்ணாடம் அருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

பெண்ணாடம் அருகே கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

Update: 2021-02-05 21:14 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் கீழ புதுத் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பாலா. இவர் தனக்கு சொந்தமான காரை சர்வீஸ் செய்வதற்காக நேற்று காலை பெண்ணாடம் கிழக்கு மெயின் ரோடு ராசு நகர் அடுத்துள்ள நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடை அருகே நிறுத்தியிருந்தார். இரவு 7 மணி அளவில் பாலாவுக்கு சொந்தமான கார் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, இதுபற்றி திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் காரின் முன்பகுதி எரிந்து சேதமானது. மேலும் இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்