மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 170 பேரை போலீசார் கைது

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-05 17:05 GMT
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 4-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று காலை 4-வது நாளாக நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும், அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

170 பேர் கைது

மாநிலச்செயலாளர் பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். மாவட்ட இணைச்செயலாளர் திலிப் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கோரிக்கைகள் குறித்து பேசி முடிந்ததும் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பல்லடம் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். சிலர் ரோட்டில் படுத்து மறியலில் ஈடுபட்டார்கள்.

தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து காங்கேயம் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மொத்தம் 110 பெண்கள் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்