மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது

மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-02-05 04:17 GMT
சென்னை, 

கேரளா மாநிலம் தலச்சேரி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தனது 18 வயது மகளை, புதுச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக, மகளுடன், மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில்நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அந்த ரெயிலின், எஸ்-4 பெட்டியில் பயணம் செய்த அவர்கள், இரவு நேரம் ஆனதும், சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருந்தனர்.

நடுவில் உள்ள இருக்கையில் ராணுவவீரரின் 18 வயது மகள் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை நேரத்தில் ரெயில் காட்பாடி ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, வாலிபர் ஒருவர், தூங்கிக்கொண்டிருந்த அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சி அடைந்து எழுந்த அந்த இளம்பெண், கூச்சலிட்டார். இதையடுத்து, அந்த பெட்டியில் பயணம் செய்த சக பயணிகள் தப்பி ஓட முயன்ற அந்த வாலிபரை பிடித்து, ரெயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ரெயில் சென்னை சென்டிரல் வந்ததும், அந்த இளம்பெண், சென்டிரல் ரெயில்வே போலீசிடம் புகார் அளித்தார்.

போலீஸ்காரர் கைது

புகாரின் பேரில் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ‘அந்த வாலிபர் கேரளா மாநிலம், பயனூர் பகுதியை சேர்ந்த பைஜூ குட்டமால் (வயது 33) என்பதும், அவர் இந்தியா-திபெத் எல்லை பாதுகாப்புப்படை போலீசாக பணி புரிந்து வந்ததும், தற்போது அவர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள 15-வது பட்டாலியன் மையத்துக்கு செல்வதும் தெரியவந்தது’. மேலும் எஸ்-6 பெட்டியில் பயணித்த அவர், எஸ்- 4 பெட்டிக்கு வந்து இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில், சென்டிரல் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். ரெயில் பயணத்தின் போது தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்