முசிறியில் போலீஸ் அலுவலகம் எதிரே மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை
முசிறியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முசிறி,
திருச்சி மாவட்டம் முசிறியில் திருச்சி செல்லும் சாலையில் வாரசந்தை அருகே மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரே முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது. வழக்கம்போல் நேற்று இரவு பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு பூசாரி கோவிலை பூட்டிச்சென்றுள்ளார்.
பின்னர் நேற்று காலை கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்வதற்காக பூசாரி கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு சில்லறை காசுகள் கீழேசிதறியும், கருவறைக்கு செல்லும் கதவு திறந்தும் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி முசிறி போலீசாருக்கு தகவல் ெதரிவித்தார். கொடுத்தார்.
உடனே முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவிலின் மதில் சுவர் வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்துவிட்டு, அங்கிருந்த உண்டியல் பூட்டை மண்வெட்டியால் உடைத்து காணிக்கை பணத்தையும், உற்சவமூர்த்திகள் அணிந்திருந்த சுமார் 4 கிராம் தங்கதாலி, காசுபொட்டு உள்ளிட்டவைகளையும் திருடிசென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரிலேயே கோவிலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.