1,330 பேருக்கு அருந்தமிழ் ஆன்றோர் விருது - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

கரூரில் 1,330 பேருக்கு அருந்தமிழ் ஆன்றோர் விருதினை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

Update: 2021-02-05 01:04 GMT
கரூர்,

கரூரில் மாவட்ட அ.தி.மு.க. இலக்கிய அணி, பெருந்தமிழ் இலக்கிய சங்கம் சார்பில் திருக்குறளின் 1,330 குறள்களை மக்களிடம் விளக்கும் வகையில், தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள் என 1,330 பேருக்கு அருந்தமிழ் ஆன்றோர்  விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

விழாவிற்கு மாவட்ட இலக்கிய அணிச் செயலர் என்.எஸ். கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, தமிழ்ச்செம்மல் விருது பெற்ற மேலை.பழனியப்பன் உள்பட 1330 பேருக்கு அருந்தமிழ் ஆன்றோர் விருது வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், கரூர் என்பது சங்ககாலத்தில் கருவூர் என பெயர் பெற்று, சேரர்களின் தலைநகரமாக இருந்ததை பல்வேறு வரலாற்று ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. வஞ்சிமாநகரத்தின் தலைநகராக கருவூர் இருந்ததை எடுத்துரைக்கும் வகையில் கரூரை கருவூராக மாற்றம் செய்ய வேண்டும். 

வள்ளூவருக்கு சிலை வைக்க வேண்டும் என திருக்குறள் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனது செலவில் திருவள்ளூவருக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும். கரூரை கருவூர் என பெயர் மாற்றம் செய்திட அரசிடம் உரிய ஆவணம் செய்யப்படும் என்றார். 

இதில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், குமாரசாமி பொறியியல் கல்லூரி தாளாளர் ராமகிருஷ்ணன், இலக்கிய அணி நிர்வாகிகள், தமிழறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெருந்தமிழ் இலக்கிய சங்கத்தின் கார்த்திகாலட்சுமி வரவேற்று பேசினார்.

மேலும் செய்திகள்