ஈரோட்டில் குப்பை கிடங்கில் தீ விபத்து; பாதாள மின்கேபிள் எரிந்து நாசம்
ஈரோட்டில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதாள மின் கேபிள் எரிந்து நாசம் ஆனது.
ஈரோடு,
ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் ஸ்டோனி பாலத்தின் கீழ் பகுதியில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் குப்பை கழிவுகளை கொட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை குப்பை கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென பிடித்து அருகே இருந்த பாதாள மின் கேபிள்களில் பரவியது. இதனால் அங்கிருந்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் குப்பை கிடங்கில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பாதாள மின் கேபிள்கள் சில அடி தூரம் வரை முற்றிலும் எரிந்து நாசமானது. மின் இணைப்பு துண்டிப்பால் அந்த பகுதி மக்கள் நேற்று இரவு சிரமப்பட்டனர்.