சிறுமி பாலியல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தீர்ப்புக்கு பயந்து தற்கொலை

புதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் தீர்ப்புக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-02-05 00:12 GMT
சிறுமிக்கு பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கரடிக்களம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(வயது 40). விவசாயி. இவர், கடந்து 2019-ம் ஆண்டு வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கிடைத்ததால் வெளியே வந்தார்.

தீர்ப்புக்கு பயந்து தற்கொலை
 இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட இருந்தது. இதற்காக திருநாவுக்கரசு கோர்ட்டுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் கோர்ட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடியபோது கிடைக்கவில்லை. நீண்டநேரமாகியும் அவர் கோர்ட்டில் ஆஜராகாததால் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்தநிலையில், பரம்பூர் டாஸ்மாக் கடை அருகே திருநாவுக்கரசு பிணமாக கிடப்பதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிைடத்தது. தகவலின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திருநாவுக்கரசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தனக்கு பெரிய அளவில் சிறை தண்டனை கிடைக்கும் என்ற பயந்து மதுவில் விஷத்தை கலந்து குடித்து  திருநாவுக்கரசு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவரது சாவுக்கான முழுமையான காரணம் ெதரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்