பட்டுக்கோட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

பட்டுக்கோட்டை அருகே திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது மின்கம்பத்தில் மோட்டார ்சைக்கிள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-02-04 23:22 GMT
மின்கம்பத்தில் மோதியது
தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா எட்டிவயல் கிராமத்தை  சேர்ந்தவர் சிதம்பரம் மகன் மணிகண்டன்(வயது 22). அதே ஊரைச் சேர்ந்த மருது மகன்கள் மணிகண்டன்(28), சக்திவேல்(20). இவர்கள் 3 பேரும் பட்டுக்கோட்டை முருகன் கோவிலில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்து விட்டு நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். 

பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாகுடி அய்யனார் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் சென்றபோது எதிர்பாராதவிதமாக ரோடு வளைவில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. 

2 பேர் பலி 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மணிகண்டன், மற்றொரு மணிகண்டன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த சக்திவேல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். 
விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆபத்தான நிலையில் இருந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விசாரணை 
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் பிேரத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்