சத்தியில் பட்டா மாற்ற லஞ்சம் வாங்கியதால் கைது: தாசில்தார் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு

சத்தியமங்கலத்தில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட தாசில்தார் உள்பட 2 பேரை கலெக்டர் பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Update: 2021-02-04 21:55 GMT
சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் சனாவுல்லா. இவர் வீட்டுமனை பட்டா மாற்றம் செய்ய சத்தியமங்கலம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். அதற்கு தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து சனாவுல்லா ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சனாவுல்லாவிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து 2 அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர் சத்தியமங்கலம் நகர நிலவரி திட்ட அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாசில்தாரையும், வருவாய் ஆய்வாளரையும் கையும் களவுமாக பிடித்தனர்.  இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோரை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பணிஇடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே அலுவலகத்தில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஈரோடு நில அளவு துறை உதவி இயக்குனரை அங்கு வரவழைத்தனர். சோதனைகள் முடித்த பிறகு நிலவரி திட்ட அலுவலகத்தை பூட்டிவிட்டு அவரிடம் சாவியை ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்