திருவாரூரில் போலீஸ் சூப்பிரண்டு- மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி அச்சமின்றி போட்டு கொள்ளலாம் என அறிவுறுத்தல்
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அப்போது அவர்கள் அச்சமின்றி அனைவரும் தடுப்பூசியை போட்டு கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
திருவாரூர்,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுவதும் கடந்த மாதம் (ஜனவரி) 16-ந் தேதி தொடங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனை, அடியக்கமங்கலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரும்பண்ணையூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி தொடர்பான வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். இதனால் பக்க விளைவுகளும் கிடையாது. எனவே அச்சமின்றி தடுப்பூசியை அனைவரும் போட்டு கொள்ளலாம்’ என கூறினார்.
இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசியை மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துக்குமார் போட்டு கொண்டனர். அப்போது அவர் கூறுகையில், ‘திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இதுவரை 532 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பாதிப்போ, பக்க விளைவுகளோ யாருக்கும் ஏற்படவில்லை. எனவே அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும்’ என்றார்.
அப்போது மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அப்துல் அமீது அன்சாரி, குழந்தைகள் நிலைய மருத்துவ அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.