அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தர்ணா

தேனி ஒன்றியக்குழு கூட்டத்தில் நிதிஒதுக்கீட்டில் பாரபட்சம் உள்ளதாக கூறி அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் 2 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. கவுன்சிலரும் வெளிநடப்பு செய்தார்

Update: 2021-02-04 17:23 GMT
தேனி,

தேனி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். 

வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டம் நடந்தபோது, 6-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா, 5-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் அன்புமணி ஆகியோர் தங்கள் வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுவது இல்லை என்றும், ஒன்றியக்குழு தலைவர் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் பாரபட்சத்துடன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டி இருவரும் கூட்டரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையே 4-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நாகலட்சுமி தனது வார்டு பகுதிகளில் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி பேசினார். 

ஆனால் அவருடைய கோரிக்கைக்கு அதிகாரிகளோ, தலைவரோ பதில் அளிக்கவில்லை என்று கூறி அவர் திடீரென கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதுவும் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூட்டத்தை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், "நிதி ஒதுக்கீட்டில் எந்த பாரபட்சமும் இல்லை" என்றார்.

மேலும் செய்திகள்