ஏலச்சீட்டு நடத்தி ரூ.11 லட்சம் மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

செஞ்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.11 லட்சத்தை மோசடி செய்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-02-04 17:20 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமன்   நாராயணன் (வயது 50). இவர் செஞ்சியில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி தங்களிடம் ரூ.10 ஆயிரம் சீட்டில் இருந்து ரூ.1 லட்சம் சீட்டு வரை பணம் கட்டினால் வட்டியுடன் சேர்த்து அதிக தொகை தருவதாக கூறினார். இதை நம்பிய செஞ்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர். இவ்வாறு 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணம் செலுத்திய நிலையில் உரியவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து பணம் கொடுக்காமல் ஸ்ரீமன் நாராயணன் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், விழுப்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் ஸ்ரீமன் நாராயணனுக்கு உடந்தையாக அவரது உதவியாளரான செஞ்சி அருகே கப்பை கிராமத்தை சேர்ந்த குமார் (45) என்பவரும் செயல்பட்டுள்ளதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீமன்நாராயணன், குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செஞ்சியை சேர்ந்த தனியார் மருத்துவமனை டாக்டர் அண்ணாமலை உள்பட 12 பேரிடம் இருந்து ஏலச்சீட்டு தொகையை வசூலித்து ரூ.11 லட்சத்து 15 ஆயிரத்து 950-ஐ ஸ்ரீமன்நாராயணன் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

7 ஆண்டு சிறை

இதையடுத்து ஸ்ரீமன்நாராயணன், குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) கோபிநாத், குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீமன்நாராயணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், குமாரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஸ்ரீமன்நாராயணன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்