இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்
நாகையில், சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகையில், சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
நாகையில் சாலை பாதுகாப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போக்குவரத்து ஆய்வாளர் தனபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவுரி திடலில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய இடங்களின் வழியாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
இந்த ஊர்வலத்தில் போலீஸ் துறையினர், இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், வர்த்தக சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர்.
சாலை விதிகள்
முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா பேசும் போது கூறியதாவது:-
பொதுமக்கள் கண்டிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். 4 சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.
இதனை கடைபிடிக்காத வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சாலை விதிகளை கடைபிடித்தால் விபத்துகளை முழுவதும் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.