பழங்கள் கொடுத்து முகாமுக்கு அழைத்து சென்ற காட்டு யானை டிமிக்கி கொடுத்து தப்பி ஓட்டம்

மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து முகாமுக்கு அழைத்து சென்ற முயற்சி தோல்வியடைந்தது. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

Update: 2021-02-04 16:08 GMT
தப்பி ஓடிய காட்டு யானை.
கூடலூர்

மசினகுடி பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு பழங்கள் கொடுத்து முகாமுக்கு அழைத்து சென்ற முயற்சி தோல்வியடைந்தது. இதனால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.

பழங்கள் கொடுத்து அழைத்து சென்றனர்

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாக ஊருக்குள் சுற்றி வந்த ஆண் காட்டு யானையை பிடித்து முதுமலையில் வைத்து பராமரிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இருப்பினும் யானையின் உடல் நலனை கருத்தில் கொண்டு மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்க வனத்துறையினர் நூதன முறையை கையாண்டனர்.

இதையடுத்து காட்டு யானைக்கு தர்ப்பூசணி, வாழைப்பழம், அன்னாசி, கரும்பு, பசும்தழைகளை வழங்கியவாறு வாழைத்தோட்டத்தில் இருந்து மாவனல்லா, தொட்டிலிங்க், பொக்காபுரம் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் வனத்துறையினர் அளித்த பழங்களை தின்றவாறு காட்டு யானை நடந்து வந்தது. இதனால் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்ததாக வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளாக ஆச்சக்கரை பகுதியிலிருந்து மசினகுடி வழியாக முதுமலைக்கு காட்டு யானையை அழைத்துச்செல்லும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டனர்.

காட்டு யானை தப்பியோட்டம்

அப்போது மன்றாடியார் என்ற இடத்துக்கு காட்டுயானை மாலை 4 மணிக்கு வந்தது. திடீரென யானையின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து திருப்பி சென்றது. இதனைத்தடுக்க வனத்துறையினர் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தது. 

சிறிது நேரத்தில் காட்டுயானை வனத்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பி ஓடியது. இதனால் வனத்துறையினரும் காட்டு யானையை பின்தொடர்ந்து ஓடினர். ஆனால் காட்டுயானை வெகுதூரம் சென்றது. இதனால் வனத்துறையினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

பாதுகாப்பாக பிடிக்க திட்டம்

இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும்போது, பல ஆண்டுகளாக ஊருக்குள் முகாமிட்டு பொதுமக்களுடன் வாழப் பழகிவிட்ட காட்டு யானையை பாதுகாப்பாக பிடிக்க திட்டமிடப்பட்டது. இதனால் பழங்களை வழங்கி முதுமலைக்கு அழைத்துச் செல்லும் பணி நடைபெற்றது. இதில் 50 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்ற நிலையில் காட்டு யானை அந்த வழியாக தப்பி ஓடிவிட்டது. உயரதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு கவலையுடன் கூறினர்.

மேலும் செய்திகள்