அய்யம்பட்டியில் 7-ந்தேதி ஜல்லிக்கட்டு
சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேனி:
சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை அலுவலர்களுடன் கலெக்டர் விரிவான ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
கலெக்டர் பேசுகையில், "ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் அடங்கிய அனுமதி அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இதில் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நிகழ்ச்சி நடக்கும். ஒவ்வொரு 75 நிமிடத்துக்கும் 50 மாடுபிடி வீரர்கள் வீதம் அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. (பொறுப்பு) கார்த்திகாயினி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் நடராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.