பண்ருட்டி அருகே கோவில் பூசாரி அடித்துக்கொலை
பண்ருட்டி அருகே கோவில் பூசாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகங்கை(வயது 75). இவர் அதே ஊரில் உள்ள அய்யனார் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகவேல்(40) என்பவருக்கும் கோவிலில் பூஜை நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் அய்யனார் கோவில் குளக்கரை ஆலமரம் அருகே சிவகங்கை பிணமாக கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிவகங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவகங்கையை அடித்துக்கொலை செய்தது முருகவேல் தான் என்பது தெரியவந்தது.
கைது
இதையடுத்து அதே ஊரில் தலைமறைவாக இருந்த முருகவேலை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், கோவிலில் யார் பூஜை நடத்துவது என்பது தொடர்பாக எனக்கும் சிவகங்கைக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும்(அதாவது நேற்று முன்தினம்) எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்து சென்று விட்டேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து தூங்கிக்கொண்டிருந்த சிவகங்கையை அடித்து தாக்கியும், அவரது மர்ம உறுப்பை மிதித்தும் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன் என்றார்.
இதையடுத்து முருகவேலை போலீசார் கைது செய்தனர். கோவில் பூசாரி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.