ராசிபுரம் அருகே எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி
ராசிபுரம் அருகே மேட்டுக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
ராசிபுரம்,
ராசிபுரம் அருகே மேட்டுக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி ஊர் பொதுமக்கள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்தனர். இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நேற்று காலை பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்து அலகு குத்தி அக்னி குண்டத்தில் தீ மிதித்தனர். மாலை எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோவிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த 6 அடி ஆழமுள்ள குழியில் எருமைக்கிடா வெட்டி போட்டு மூடினர். எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மேட்டுக்காடு, பட்டணம், காக்காவேரி, வடுகம், ராசிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.