அரூரில் தேவாதியம்மன் திருவிழா 225 ஆடுகள் வெட்டி கறி பங்கீடு
அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் சார்பில் தேவாதியம்மன் திருவிழா வியாபார மேம்பாடு, குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை வளம் ஆகியவற்றை வேண்டி நடைபெற்றது.
அரூர்,
அரூரில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தின் சார்பில் தேவாதியம்மன் திருவிழா வியாபார மேம்பாடு, குடும்ப நலம், ஊர் நலம், அமைதி, மழை வளம் ஆகியவற்றை வேண்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜவுளி சார்ந்த தொழில் செய்து வரும் அரூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். விழாவையொட்டி அரூரில் காமாட்சியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள தேவாதியம்மன் தோட்டத்தில் ஆவாரம் செடியின் அடியில் முதல் நாள் விழாவில் 22 ஆடுகள் வெட்டப்பட்டது. அதன் ரத்தத்தை பிரசாதமாக ஆண்கள் அனைவரும் நெற்றியில் வைத்து கொண்டனர். இதைத்தொடர்ந்துபொங்கல், பொரி கடலை அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. நேற்று நடந்த 2-வது நாள்விழாவில் 203 ஆடுகள் என மொத்தம் 225 ஆடுகள் வெட்டப்பட்டு 1960 குடும்பங்களுக்கும் கறி பங்கிட்டு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா நிர்வாகிகள் தனபால், கதிரேசன், சண்முகம், குமரன், சரவணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.