பாசூர் டாஸ்மாக் கடையில் நடந்த கொள்ளை வழக்கில் வாலிபர் கைது
பாசூர் டாஸ்மாக் கடையில் நடந்த கொள்ளை வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
பாசூர்,
ஊஞ்சலூர் அருகே உள்ள பாசூர் டாஸ்மாக் கடையில் கடந்த டிசம்பர் மாதம் 13-ந் தேதி இரவு 10 பேர் கொண்ட கும்பல் ரூ.28 ஆயிரம் மதிப்புடைய மதுபாட்டில்களையும், கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையடித்து சென்றது.
இது தொடர்பாக மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடியபோது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 பேர் ஏற்கனவே நடந்த குற்றசெயல்களுக்காக ஜெயிலில் இருப்பது தெரிந்தது. இதில் நாமக்கல் மாவட்டம் மண்பச்சபாளியை சேர்ந்த முத்து (வயது 26), வேட்டுவபாளையத்தை சேர்ந்த இளங்கோ என்ற 2 பேர் மட்டும் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இதனால் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தார்கள்.
இந்தநிலையில் பாசூர் ரெயில்வே கேட் அருகே நேற்று முத்து நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் முத்துவை சுற்றிவளைத்து கைது செய்தார்கள். மேலும் தலைமறைவாக உள்ள இளங்கோவை தேடி வருகிறார்கள்.