டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
முண்டியம்பாக்கத்தில் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி,
ஆயுர்வேத டாக்டர்களும் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி முன்பு டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் குருநாத் முன்னிலை வகித்தார். டாக்டர் திருமாவளவன் வரவேற்றார். தேசிய இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ஜெயலால், முன்னாள் தலைவர் டாக்டர் விஜயகுமார், மாநில தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் டாக்டர் ரவிக்குமார், மாநில தலைவர்கள் டாக்டர்கள் பழனிசாமி, ராஜா, அபுல்ஹாசன், தியாகராஜன், பிரகாசம், ஸ்ரீதர், வினித் ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில் நிடிஆயோக் அமைப்பு மூலம் 4 குழுக்களை அமைத்து மருத்துவ கல்வி, பொது சுகாதாரம், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகியவற்றை ஒரே கலவைக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்துள்ளது. இது நாட்டின் சுகாதார துறையை பாதிக்கும். எனவே இந்த நிடி ஆயோக் அமைப்பை கலைக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதில் டாக்டர்கள் சிவக்குமார், மோகன், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.