சாலை பாதுகாப்பு குறித்து மோட்டார் சைக்கிளில் பேரணி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர் போலீஸ் சூப்பிரண்டு
சாலை பாதுகாப்பு குறித்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடலூர்,
32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கடலூர் பேருந்து நிலையத்தில் கடந்த 19-ந் தேதி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் பிறகு மாவட்ட எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு கண்காட்சி வாகனம் மூலம் சுலோகங்கள், சாலை பாதுகாப்பு குறிப்புகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்தும், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை பேரணி நடந்தது.
பேரணி
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். மேலும் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கடலூர் டவுன்ஹாலில் இருந்து புறப்பட்ட பேரணியானது அண்ணா பாலம் வழியாக எஸ்.என்.சாவடி சந்திப்பு வரை சென்று வந்தது. இதில் மண்டல போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், ரவிச்சந்திரன், நல்லத்தம்பி, கண்ணன், முருகேசன், பிரான்சிஸ் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.