புதிய தொழிலாளர் நல சட்ட திருத்த நகலை எரித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்
விழுப்புரத்தில் புதிய தொழிலாளர் நல சட்ட திருத்த நகலை எரித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
மத்திய அரசின் புதிய தொழிலாளர் நல சட்ட திருத்தத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருத்தப்பட்ட சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டல தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று மாலை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி கண்டன உரையாற்றினார். இதில் தொ.மு.ச. பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், நிர்வாக பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மணி, சி.ஐ.டி.யு. தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், துணைத்தலைவர் இளம்பாரதி, மறுமலர்ச்சி தொழிற்சங்க நிர்வாகி ரவி, ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி குப்பன், மத்திய பணிமனை தொ.மு.ச. செயலாளர்கள் கதிரேசன், தண்டபாணி, சீத்தாராமன், சுப்பிரமணியன், பெருமாள், சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் ஏழுமலை குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சட்ட நகல் எரிப்பு
இவர்கள் அனைவரும் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி புதிய தொழிலாளர் நல சட்ட திருத்த நகலை தீ வைத்து எரித்து போராட்டம் செய்தனர். உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அதன் பிறகு அவர்களிடம் போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.