கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஊட்டியில் பேரணி நடத்த முயன்ற 657 பேர் கைது
கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஊட்டியில் பேரணி நடத்த முயன்ற 657 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி
கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஊட்டியில் பேரணி நடத்த முயன்ற 657 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவதூறு பேச்சு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து கல்யாண ராமனை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பேரணி செல்ல முயற்சி
இந்த நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அனைத்து ஜமாத் ஒருங்கிணைந்த போராட்டக்குழு சார்பில் போராட்டத்தில் ஈடுபட ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும், அங்கிருந்து பேரணியாக செல்ல முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, பேரணி செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்கள். இருந்தபோதிலும் அவர்கள் தடையை மீறி பேரணி செல்ல முயன்றனர்.
657 பேர் கைது
இதையடுத்து போலீசார் 176 பெண்கள் உள்பட 657 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.