அணைக்கட்டு அருகே மலைவாழ் மக்கள் 700 பேருக்கு சாதி சான்றிதழ்

அணைக்கட்டு அருகே ஜார்தான்கொல்லை கிராமத்தில் மலைவாழ் மக்கள் 700 பேருக்கு ஒரே நாளில் சாதிச்சான்றிதழ்களை உதவி கலெக்டர் கணேஷ் வழங்கினார்.

Update: 2021-02-03 12:57 GMT
அணைக்கட்டு

அணைக்கட்டு அருகே ஜார்தான்கொல்லை கிராமத்தில் மலைவாழ் மக்கள் 700 பேருக்கு ஒரே நாளில் சாதிச்சான்றிதழ்களை உதவி கலெக்டர் கணேஷ் வழங்கினார்.

சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை மலைப் பகுதியில் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் சாதி சான்று இல்லாததால் அரசு வேலைக்கு செல்ல முடியாமலும் அரசின் உதவித்தொகை கிடைக்காமலும் இருந்து வருகின்றனர். எனவே அவர்கள் தங்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி வருவாய்த்துறையினரிடம் மனு அளித்தனர். 

மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதற்காக 4 முறை முகாம்கள் நடத்தப்பட்டன. 

இந்த நிலையில் ஜார்த்தான்கொல்லை மலைப்பகுதியில் வருவாய்த்துறை சார்பில் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க தலைவர்கள் கண்ணன், பாபுஜி, ஊராட்சி செயலர் நிவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் பழனி வரவேற்றார். 

700 பேருக்கு சாதிச்சான்றிதழ்

சாதி சான்றிதழ் பெறுவதற்கு 800-க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது. 

இந்த முகாமில் நேரடியாக மனுக்களை பெற்று 700 பேருக்கு உதவி கலெக்டர் கணேஷ் தலைமையில் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். சாதி சான்றிதழ் வாங்க மனு கொடுக்காதவர்கள் அடுத்த முறை நடத்தப்படும் முகாமில் மனுக்களை கொடுத்து சாதி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்