நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

கொரோனா பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு

Update: 2021-01-31 05:49 GMT
நாமக்கல், ஜன.31-
நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒரு மூதாட்டி இறந்ததை தொடர்ந்து இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல் 11,612 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
111 பேர் கொரோனாவுக்கு பலி
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 110 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராசிபுரத்தை சேர்ந்த 67 வயது மூதாட்டி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல் 11,595 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,601 ஆக உயர்ந்தது.
உதவி பொறியாளர்
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் வேளாண்மை உதவி பொறியாளர் உள்பட மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11, 612 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 12 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 11, 412 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 111 பேர் பலியான நிலையில், மீதமுள்ள 89 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்