பந்தலூர் அருகே தேவாலா அரசு தேயிலை தோட்ட பகுதியில்(ரேஞ்ச்-1) ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவில் 8 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் அவர்கள் பீதி அடைந்தனர். விடிய, விடிய அந்த பகுதியிலும், தேயிலை தோட்டங்களிலும் முகாமிட்ட காட்டுயானைகள், நேற்று காலையில் தேவாலா-அத்திக்குன்னா சாலையில் உலா வந்தன. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வந்த தேவாலா வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.