அரியலூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்; நாளை தொடங்குகிறது
அரியலூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான முகாம் நாளை தொடங்குகிறது.
அரியலூர்,
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்புக்காக கோழிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் இரண்டு வாரம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தடுப்பூசி போடும் முகாம் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி போடப்படவுள்ளது. எனவே அனைத்து கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.