1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

1 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது.

Update: 2021-01-30 16:22 GMT
ராமநாதபுரம், 

போலியோ சொட்டு மருந்து இளம்பிள்ளை வாதம் என்ற நோயை தடுக்கும் தடுப்பு மருந்தாகும். போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (31-ந் தேதி) இந்தியாவில் உள்ள 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 234 போலியோசொட்டு மருந்து மையங்களில் 4ஆயிரத்து 912 பணியாளர்களை கொண்டு 1லட்சத்து 14ஆயிரத்து 136 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அனைத்து அரசு மருத்துவமனைகள், வட்டார சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் நடைபெறும். மேலும் 27 சிறப்பு குழுக்கள் மற்றும் 33 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட போலியோ சொட்டு மருந்து முகாம்களில் தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயனடைய வேண்டும். இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்