மூடியே கிடக்கும் விவேகானந்தர் மணிமண்டபம்
பாம்பன் குந்துகால் பகுதியில் விவேகானந்தர் மணிமண்டபம் மூடியே கிடக்கிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ளது விவேகானந்தர் மணிமண்டபம். அமெரிக்கா சிகாகோ நகரில் நடந்த சர்வ சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் சிறப்பு குறித்து மாநாட்டில் பேசிவிட்டு இந்தியா வந்தபோது கால் பதித்த முதல்இடம் பாம்பன் குந்துகால் கடற்கரை தான்.
சுவாமி விவேகானந்தர் பாம்பன் குந்துகால் கடற்கரையில் வந்திறங்கிய தன் நினைவாகவே அங்கு விவேகானந்தர் மணி மண்டபம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. இந்த மணி மண்டபத்தில் விவேகானந்தர் நிற்பது போன்ற முழு உருவச் சிலையும் அருகில் பாஸ்கர சேதுபதி சிலையும் மற்றும் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப் படங்களும் தியான மையம் அமைக்கப்பட்டுள்ளன. ராமேசுவரம் வந்து செல்லும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் பாம்பன் குந்துகால் பகுதிக்கு சென்று விவேகானந்தர் மணிமண்டபத்தையும் பார்த்து ரசித்து சென்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணி மண்டபம் மூடப்பட்டது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தில் பொது ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அனைத்து சுற்றுலா இடங்களும் மற்றும் கடற்கரை பகுதிகள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் 300 நாட்களை கடந்தும் இதுவரையிலும் மணிமண்டபம் திறப்பதற்கு அரசால் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபம் மற்றும் 10 மாதங்களை கடந்தும் மூடியே கிடக்கின்றன. இதனால் அங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மணிமண்டபத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
இதேபோல் தங்கச்சிமடம் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபமும் 300 நாட்களை கடந்தும் திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது. எனவே மத்திய-மாநில அரசுகள் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் மற்றும் விவேகானந்தர் மணிமண்டபம் ஆகிய 2 மண்டபங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு திறந்து அனுமதிக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.