காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
காட்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்,
காட்பாடி கழிஞ்சூர் கருடாத்ரி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). இவருடைய மனைவி ரம்யா. பாலகிருஷ்ணன் காந்தி நகரில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.
கணவன்- மனைவி இருவரும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். சிகிச்சைக்கு பின்னர் மாலையில் வீடு திரும்பினர்.
வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 9 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பாலகிருஷ்ணன் விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், பாலகிருஷ்ணனின் நடவடிக்கைகளை நோட்டமிட்ட அந்தப்பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் துரிதநேரத்தில் வீட்டில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறார்.