தேவகோட்டை,
தேவகோட்டையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தலைமையில் பெண்கள் பேரணியாக வந்து சாலை யை சீரமைக்கக்கோரி மனு கொடுத்தனர்.
பேரணி
திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை தேவகோட்டை நகர் வழியாக செல்கிறது. இந்த சாலை சீரமைக்கப்படாததால் பல இடங்களில் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். குண்டும்-குழியுமான இந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு ேபாராட்டங்கள் நடத்தி விட்டனர். இதுவரை எந்த நடவடிக்கையும எடுக்கவில்லை.
இந்த நிலையில் சாலை சீரமைக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று ஏராளமான பெண்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேவகோட்டை தியாகிகள் பூங்கா முன்பு திரண்டனர். அப்போது பேரணியை காங்கிரஸ் சட்டமன்ற தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஆர்.ராமசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:-
முறைகேடு
தேவகோட்டையில் திருச்சி-ராமேசுவரம் சாலை நடக்கக்கூட முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக உள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் சட்டமன்றத்திலும் வலியுறுத்தியும் எந்த வேலையும் நடைபெறவில்லை. அதேபோல் இந்த பகுதி மழையால் பயிர்கள் பெரும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால் வருவாய் துறையினர் ஆங்காங்கே கணக்கெடுப்பில் முறைகேடு நடத்தி உள்ளனர். முதல்-அமைச்சரும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.600 கோடி கொடுத்துள்ளதாக கூறுகிறார். ஆனால் இதுவரை ஒருவருக்கு கூட வழங்கவில்லை கேட்டால் கணக்கெடுக்கப்பு நடந்து வருகிறது என கூறுகிறார்கள். இதேபோல் இந்த பகுதியில் இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒழுங்காக பணம் தருவது கிடையாது. சில இடங்களில் ஏதோ ரூ.5 ஆயிரம் வழங்கி விட்டு முழுமையான இன்சூரன்ஸ் வழங்கியது போல் ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். இன்சூரன்ஸ் கம்பெனியும் அரசும் கூட்டணி வைத்து உள்ளனர். தேவகோட்டை பகுதியில் எழுவன்கோட்டை, ஈகரை போன்ற பகுதிகளில் மணல் கொள்ளை நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நினைவு மண்டபம்
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். அவருக்கு நினைவு மண்டபம் கட்டியது சரியா? அவர் குற்றவாளியா இல்லையா? அவர் மரணம் அடையாமல் இருந்திருந்தால் ஜெயிலுக்கு சென்று இருப்பார்.எனவே அவர் ஊழல்வாதி. அவர் மாதிரி ஊழல்வாதிகள் தான் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மனு கொடுத்தனர்
பேரணியில் திரளான பெண்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். தியாகிகள் பூங்காவில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய சாலை வழியாக ராம்நகரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த உதவி கலெக்டர் தவசெல்வத்திடம் மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இந்த போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் கருமாணிக்கம், மீராஉசேன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி, எஸ்.பி.எஸ்.சண்முகம், கவிஞர் கோவிந்தன், அப்பச்சி சபாபதி, வட்டார தலைவர்கள் பூங்குடி வெங்கடாசலம், சிறுநல்லூர் பிரபாகரன், தேவகோட்டை நகர தலைவர்கள் சஞ்சய், லோகநாதன், கண்ணங்குடி வட்டார தலைவர் ராஜ்குமார், பூங்கொடி செல்லம், புஷ்பராஜா, தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.