குளித்தலை அருகே விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குளித்தலை,
குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில், குளித்தலை வட்டபகுதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இணையவழியாக நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற குளித்தலை வட்ட பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
கட்டளைமேட்டு வாய்க்காலில் நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகளை தரமாக செய்து முடிக்க வேண்டும். மருதூர் பகுதியில் காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும். வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக, மழைக்காலங்களில் மட்டும் மாயனூரில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
கட்டளை மற்றும் தென்கரை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க வேண்டும். கட்டளைமேட்டு வாய்க்காலில் புனரமைப்பு பணி நடைபெறுவதால், அந்த பணி மேற்கொள்ளப்படாத வாய்க்கால் பகுதிக்கு, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் செல்லும் தண்ணீரை கொண்டு சென்று விவசாயிகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை காரணம் காட்டி, அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி கடன் வழங்க மறுக்கப்படும் போக்கை கைவிட்டு அவர்களுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 3 நிதி ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து காப்பீடுதொகை மட்டுமே பெற்றுள்ளனர்.
ஆனால், 3 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தை உலர்த்த, நெல் உலர்த்தும் எந்திரம் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.கூட்டத்தில், குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்த் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.