வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி மனு அளிக்கும் போராட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
செங்கல்பட்டு,
பாட்டாளி மக்கள் கட்சி. வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி செங்கல்பட்டு ராட்டிணகிணறு அருகே கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட செயலாளர் ராம்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் விநாயகம் முன்னிலை வகித்தனர். மாநில துணைப்பொதுச்செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
மாநில அமைப்பு செயலாளர் என்.எஸ்.ஏகாம்பரம். மாநில வன்னியர் சங்க துணைத்தலைவர் கணேசமூர்த்தி. முன்னாள் தலைவர் வாசு. உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள். மாநில செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம், மாநில இளைஞரணி துணை செயலாளர் நிர்மல்குமார், நிர்வாகிகள் செல்லப்பா, பார்த்தசாரதி, ஜோஸ்வா, மூர்த்தி, முத்துக்குமார், பாண்டியன், ஐ.நா.கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிசிடம் மனுக்களை அளித்தனர். இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
காஞ்சீபுரம் மாவட்ட பா.ம.க. சார்பில் மாநில துணைச்செயலாளர் பொன் கங்காதரன், மாவட்டச்செயலாளர் உமாபதி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கான பா.ம.க.வினர் பேரணியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடுத்த காவலன் கேட் பகுதிக்கு வந்து 20 சதவீத தனி இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் பா.ம.க.வினர் கலெக்டர்அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர். பா.ம.க.வினரின் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.