மாவட்ட செயலாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முற்றுகை
மாவட்ட செயலாளரை மாற்றக்கோரி அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
அ.தி.மு.க. தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராமை மாற்றக்கோரி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சிவராஜ் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர்கள் சிவா, வாசன், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஆதிராஜாராமை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் ஆதிராஜாராம், கட்சி விதிமுறைகளுக்கு எதிராக மாணவரணி மாவட்ட செயலாளராக 18 வயது நபரை நியமித்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஆதிராஜாராமுக்கு பதவி எதுவும் வழங்காமல் விலக்கியே வைத்திருந்தார். எனவே அவரை பதிவியில் இருந்து உடனடியாக நீக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்ற சிறிது நேரத்தில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராமுக்கு ஆதரவாகவும் சிலர் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி அவர்களும் கலைந்து சென்றனர்.