பணி நிரந்தரம் கோரி சென்னையில் நர்சுகள் தொடர் போராட்டம்
சென்னையில் பணி நிரந்தரம் கோரி நர்சுகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,
மருத்துவ பணிகள் தேர்வாணையம் (எம்.ஆர்.பி.) மூலம் கடந்த 2015-ம் ஆண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியது. மேலும் இவர்கள் பணியில் இருந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் காலமுறை ஊதியம் வழங்கப்படும் எனவும் ஒப்பந்த முறையில் பணி வழங்கப்பட்டது. இந்தநிலையில் 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 2 ஆயிரம் பேர் மட்டுமே காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதைப்போல் கொரோனா காலத்திலும் எம்.ஆர்.பி. மூலம் பணியமர்த்தப்பட்ட 4 ஆயிரம் நர்சுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில் பணி நிரந்தரம்கோரி மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் நேற்று சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில துணை தலைவர்கள் சுஜாதா, இந்திரா நெல்சன், பொது செயலாளர் நே.சுபின் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில தலைவர் கலைச்செல்வி, எம்.ஆர்.பி. செவிலியர்கள் நலச் சங்க தலைவர் ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகே சாலையில் நர்சுகள் தங்களது போராட்டத்தை தொடங்கினர்.
இந்தநிலையில் போலீசாரின் கோரிக்கையை ஏற்று சாலையில் இருந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நர்சுகள், உழைப்பாளர் சிலை அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக பணி நிரந்தரம் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் அனைவரும் நடைபயணமாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பசுமை தீர்ப்பாயம் அலுவலகம் அருகே வந்தனர். பின்னர் போராட்டத்தை அங்கு தொடர்ந்தனர்.
இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபடும் நர்சுகளின் பிரதிநிதிகளுடன், நேற்று மதியம் மருத்துவ பணிகள் இயக்குனர் குருநாதன் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் போராட்டம் தொடர்ந்தது.
இதையடுத்து நேற்று மதியம் 3 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக போராட்டக்காரர்களில் சிலரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய நிதி துறை ஒப்புதல் வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாநில பொது செயலாளர் நே.சுபின் கூறியதாவது:-
அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற 2 கட்ட பேச்சுவார்த்தைகளில் சரியான உடன்பாடு எட்டப்படவில்லை. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பணி நிரந்தரம் குறித்து எந்த ஒரு எழுத்துப்பூர்வமான வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லை. எனவே எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு நர்சுகளுக்கு இணையான ஊதியம், கொரோனா தொற்று காலத்தில் எங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய நர்சுகளுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்க ஊதியம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நர்சுகள் பணிகளை புறக்கணித்து கருப்பு பட்டை அணிந்து மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நர்சுகளை நேற்று இரவு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து, அவர்களது போராட்டத்துக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.