திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் போராட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.

Update: 2021-01-29 21:42 GMT
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்றும், அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்ரா, பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு.மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், செயலாளர் பழனிசாமி பேசினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டம் குறித்து பொருளாளர் ராணி கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 3 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். அங்கன்வாடிக்கு தேவையான பொருட்களை 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுத்து வருகிறோம். இந்த போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 36 வருடங்களுக்கு மேலாக பணி செய்து வரும் எங்களுக்கு அரசு ஊழியர்கள் ஆக்கி காலமுறை ஊதியம் வழங்க கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். துறை சார்ந்த பணிகள் மட்டுமின்றி பிற துறைகளின் பணிகளையும் செய்து அரசுக்கு தேவையான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளோம். இயற்கை சீற்றங்களின் போதும், கொரோனா காலத்திலும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இணையாக நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு சேவை செய்தோம். ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை ஏழாவது ஊதியக் குழுவில் அரசு ஊழியர் ஆக்குவேன் என உறுதி கொடுத்தார். அவரது பெயரில் செயல்படும் தற்போதைய அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டங்கள் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அதை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் சிவராசுவை சந்தித்து மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்