பொள்ளாச்சியில் அதிர்ஷ்ட கல், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக மோசடி செய்த கும்பல் கைது
பொள்ளாச்சியில் அதிர்ஷ்ட கல், செல்லாத ரூபாய் நோட்டு களை மாற்றி தருவதாக மோசடி செய்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் அதிர்ஷ்ட கல், செல்லாத ரூபாய் நோட்டு களை மாற்றி தருவதாக மோசடி செய்த 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடி சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் கடை உரிமையாளர்
பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 30). இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது பழைய நண்பர்களான தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கையா (44), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்குமார் (39), திருப்பூரை சேர்ந்த அப்பாஸ் மந்திரி (36) ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
அப்போது அவர்கள் தங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் அதிர்ஷ்ட கல் உள்ளது. அந்த கல்லின் மீது ஆணி போன்ற இரும்பு துகள்களை வைத்தால் உருகி விடும். வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும். யாராவது கேட்டால் தகவல் தெரிவிக்கவும் என்று ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.
செல்லாத ரூபாய் நோட்டுகள்
மேலும் கேரள நண்பர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்து வருகின்றனர். ரூ.1000 கொடுத்தால் ரூ.10 ஆயிரம் செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொடுப்பார்கள். மேலும் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்கு தெரிந்த வங்கி அதிகாரிகளை ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் என்றும் கூறி உள்ளனர்.
இதை நம்பி தவணை தொகையாக ரியாஸ் 3 பேரிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்து உள்ளார். இதற்கிடையே இது மோசடி என்பது ரியாசுக்கு தெரியவந்தது. எனவே அவர் தனது நண்பர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் இது மோசடி கிடையாது என்று கூறி சமாளித்து உள்ளனர்.
அதிர்ஷ்ட கல்
இதற்கிடையில் மேற்கண்ட 3 பேரும் செல்லாத ரூபாய் நோட்டுக்கள் மற்றும் அதிர்ஷ்ட கல் எங்களிடம் தயாராக இருக்கிறது. பணத்தை ஏற்பாடு செய்து கொண்டு குஞ்சிபாளையம் சுடுகாட்டு பகுதிக்கு வருமாறு ரியாசிடம் கூறி உள்ளனர்.
ஏற்கனவே நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதால் சுதாரித்துக் கொண்ட ரியாஸ், பணத்தை எடுத்துச்செல்லாமல் அதற்கு பதிலாக ஒரு பையில் ரூபாய் நோட்டுகள் போன்று பேப்பரை வைத்து எடுத்துச்சென்றார். அங்கு 3 கார்களில் மூக்கையா, அப்பாஸ் மந்திரி, ராஜ்குமார் உள்பட பலர் நின்று கொண்டிருந்தனர்.
வாக்குவாதம்
அங்கு சென்ற ரியாஸ் தன்னிடம் ரூ.4 லட்சம் உள்ளதாகவும், செல்லாத ரூபாய் நோட்டுக்கள் மற்றும் அதிர்ஷ்ட கல்லை காட்டுமாறு கூறினார். ஆனால் அவர்கள் பணம் கொடுத்தால் தான் காட்டுவோம் என்று கூறினார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும், அங்கு நின்றிருந்த கும்பல் தப்பி ஓடியது. உடனே போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
22 பேர் கைது
அதில் அவர்கள் அதிர்ஷ்டகல், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், ரியாசிடம் மோசடி சாதாரண கல்லை அதிர்ஷ்ட கல் என்றும், ரூபாய் நோட்டுகள் எதுவும் கொண்டு வராமல் அவரிடம் இருந்து பணத்தை பெற்று தப்பிச்செல்லலாம் என்று திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 22 பேரையும் கைது செய்தனர்.
கைதான நபர்களின் பெயர் விவரம் வருமாறு:-
உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கையா (44), திண்டுக்கல் ராஜ்குமார் (39), திருப்பூர் அப்பாஸ் மந்திரி (36), கேரளா மாநிலம் எர்ணாகுளம் நவீன் ஆனந்த் (56), சந்திரன் (53), சந்தோஷ் (65), கொச்சி ரசித்அஜிஸ் பட்டேல் (32), ஜோசன் (52), விஷ்ணு (23), பாசில் (28), கோழிக்கோடு சுனில் (36), சுதீஷ் (38), பைசல் (42), சாஷத் (42), தினேஷ் (32), விஷாக் (29), திருச்சூர் அனில்குமார் (39), மலப்புரம் நூர்தீன் (56), ஆலப்புழா வினோத் (35), வயநாடு அனுப் (29), அக்ஷய் (23), சுபின் (28) ஆகியோர் ஆகும்.
அவர்களிடம் இருந்து 22 செல்போன்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் மீது நம்பிக்கை மோசடி செய்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.