அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தி்ல் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
விழுப்புரம்,
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும்போது ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்த்தி மாநிலம் தழுவிய அளவில் நேற்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் மலர்விழி, கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, சமூக நலத்துறை சங்க மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஏழுமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலாளர் சித்ரசெல்வி நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராமதிலகம் நன்றி கூறினார்.