வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க.வினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பா.ம.க.வினர், வன்னியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் வாகனங்களில் வந்து மஞ்சக்குப்பம் மைதானத்தில் திரண்டனர். ஏற்கனவே முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதால், அவர்கள் மஞ்சக்குப்பம் மைதானத்திலேயே நிறுத்தப்பட்டனர்.
தொடர்ந்து வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டரிடம் மனு
தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்து காரில் புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுங்கள். மற்றவர்கள் வெளியில் காத்திருங்கள் என்றார்.
இதை கேட்ட நிர்வாகிகள், அனைவரும் கலெக்டரை சந்திக்க செல்வோம் என்றனர். இதனால் போலீசாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கேட்டு மனு அளித்தனர்.
இதை பெற்ற அவர், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.