சிறுமுகை அருகே பெண் யானை பரிதாப சாவு

சிறுமுகை அருகே பெண் யானை பரிதாபமாக இறந்தது

Update: 2021-01-29 14:45 GMT
இறந்து கிடந்த பெண் யானை.
மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை காப்புக்காட்டில் களப்பணியாளர்கள் நேற்று  மாலை 5 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் பெண் யானை ஒன்று பரிதாபமாக  இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இது குறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் செந்தில் குமார், மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரியப்படுத்தினார். 

இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த பெண் யானையை பார்வையிட்டனர்.

உடற்கூறு பரிசோதனை

பின்னர் வன கால்நடை மருத்துவர் சுகுமாரன் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது யானையின் உடற்பாகங்கள் மாதிரி சோதனைக்கு எடுக்கப்பட்டது. காலை 11மணிக்கு தொடங்கிய உடற்கூறு பரிசோதனை மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. 

உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் வனப்பகுதியில் வன விலங்குகளின் உணவுக்காக வனப்பகுதியில் அப்படியே போடப்பட்டது. இதுகுறித்து அரசு வன கால்நடை மருத்துவர் சுகுமாரன் கூறியதாவது:-

அதிக ரத்தப்போக்கு

சிறுமுகை வனப்பகுதியில் இறந்து கிடந்த பெண் யானைக்கு வயது சுமார் 23 இருக்கும். அதிக ரத்தப் போக்கு காரணமாக யானை உயிரிழந்துள்ளது. வயிற்றுப்பகுதி மற்றும் குடலில் உணவுப் பொருட்கள் எதுவும் இல்லை. மற்ற யானைகளோடு ஏற்பட்ட மோதல் மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததற்கான காயங்கள் எதுவும் உடலில் தென்படவில்லை. 

யானையின் உடலில் ரத்தத்தின் அளவு குறைந்து இருதயத்தில் அழுத்தம் ஏற்பட்டு யானை இறந்துள்ளது. வேறு காரணங்கள் எதுவும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்