பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் மக்கள் திரள் போராட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் மக்கள் திரள் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-29 11:21 GMT
வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் மக்கள் திரள் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் திரள் போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 6-வது கட்டமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகங்கள் அருகே மக்கள் திரள் போராட்டம் நடந்தது.

அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கு.வெங்கடேசன் வரவேற்றார். மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.

போராட்டத்தில், வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு கோஷங்களை எழுப்பினர்.

மனு அளித்தனர்

இதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் மனு கொடுத்தனர்.

மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், வேலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து வாகனங்களும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டன.

 இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலக பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்